Wednesday, December 14, 2011

சூர்ப்பணங்கின் எச்சில்வழிப் பயணம்










என் பேய்த்தாய் முன்னமே நேர்வர 
நல்லுறுதி ஈந்தவள்,
தேற்றும் சொற்களை பகிர முடியாதவளாய் 
இருக்கிறேன்
காத்திருப்பு மறுக்கப்பட்டவர்களிடத்து

-    அமா அட்டா ஐடூ 
(கானா தேசத்து நாடக இயக்குநர்)
    (”பிசாசின் தடுமாற்றம்” நாடகத்தில்)


 அறுத்துக் கூட்டிய சோளக் குதிர் போன்ற பாவாடை, அடைக்கு விரித்த பறவையின் சிறகாய் படர்ந்திருக்க, தங்காள் இயற்கையும் அதிகாரங்களும் கைவிட்ட தன் துயர் கதை சொல்லச் சொல்ல,வாழ்தலின் கனாச் சிதைவை தோன்றல்கள் எழுவரும் விசும்பி வினவ., சுய மரணக் குறிப்புகளுடன் துவங்குகிறது ச. முருகபூபதியின் புதிய நிகழ்கூத்து சூர்ப்பணங்கு ,உறுமியொலி அடிவயிற்றில் முதிர்ந்த மிருகத்தின் ரோமக் கரம் போல் வருட வருட பிரெஞ்சுக்கவி ஆண்டோனின் ஆர்டோ நிறுவ இச்சித்த வன்முறையின் நாடக அரங்கு விரிகிறது
 
அடவுகளின் வழி மின்னூட்டிய படிமங்களின் களரி  அது,சடங்குகளின் சன்னத முறுக்கேறிய குரலில் சாபமெரித்து திமிறும் குரல்கள் கொண்டு பலிச்சடங்கென நிகழ்வுறுகிறாள் சூர்ப்பணங்கு .

விதை நீக்கப் பெற்ற வைக்கோல் சரங்கள் வகுத்து சாவின் கருவறைக்குள் புகும் கூந்தல் கிணறு ஆதாரப் படிமம்.வைக்கோல் சரம்  கருமாத்தூர் கூந்தல் என்கிறது பிரதி.உரிமைகளும் உச்சங்களும் நீக்கப்பட்ட தானியங்கள், எனில் வைக்கோல் சரம் கூந்தலாய்.வண்டுகளோடு மிதக்கும் கூந்தல் சாக்கிணறு கண்படுகிறது பேதைநிலை கடவா அணங்கொருத்திக்கு – அரிந்த கனவுகளோடும் நிர்ப்பந்தித்த நவகண்ட சிரங்களோடும் என மொழிப் படுத்திக் கொள்கிறேன் .

உப்பு சூழ் பிரபஞ்சத்தின் மறுதலிக்கப் பெற்ற பனிக்குடங்களின் நீர்மையெல்லாம் கொண்டு குழிந்திருக்கிறது அத்துளை நிலம்.வைக்கோல் சரம் ,நிகழ்வெங்கும் அறுத்துத் தீராத ஆதிஆப்பிரிக்க அணங்கின் தொப்பூல் கொடியாய் சாப நச்சின் கசப்பை தெளித்தபடி நீள்கிறது, சவுரி முடி விற்பவனின் காக முள் மரத்தின் சாம்பல் வாசனை வீசும் குரலுடன்.


சடங்குகள் பிரக்ஞையின் உருமாறிகள் எனலாம்,சடங்குகள் தொன்மத்தின் நிகழ் குறிப்புகளென மொழிய வாய்ப்பற்றவையெனினும் நம்பிக்கைகளின் சாட்சியங்கள்.முருகபூபதியின் கூத்துகளில் பயனுறும் முகமூடிகளை சடங்குகளுக்கான முகமூடிகளின் வகைமைகளில் பொருத்தலாம்.நிகழ்வின் பன்முகத்தை பெருக்கும் காரணிகளில் சடங்குகள் மற்றும் முகமறைப்புகள் குறிப்பிடத் தக்கவை.சடங்குகள்,மரபு மற்றும் நிலம் சார்ந்த நம்பிக்கைகளை மீளுருவாக்கம் செய்வதுவும் விழுமியங்களின் மீதான மீள்விசைக்கான இயல்பூக்கமும் மையம் நோக்கிய பயணமும் இந்த கூத்து நிகழ்வின் செலுத்துவிசையாய் இருக்கின்றன

மருளாடிகளின் மன்றாட்டுகள் கரங்குதுடியோடு உடுக்கை பேச ,உள்ளிருக்கும் அணங்கை இறைஞ்ச, மாளா நெருப்பை உறிஞ்சத்தரும் உதிரப் பரிதிகள் சகாப்தம் தோறும் பெயர் மாற்றம் பெறுவதும் ,விளிம்பு நிலை உயிரிகளின் அதிகப் பட்ச ஞாபகப் பிரதியாய் நெஞ்சிலெழுதும் மச்சங்களும் ,தழும்புகளும் செவிவழி கதையாடல்களால் தலைமுறை தோறும் எச்சில்வழி பயணிப்பதுவும்,கண்டம் கடந்தேக விற்கப் பெற்ற லாகோஸ் நகரத்தின் (Point of no return)கருப்பின அடிமைப் பெண்டிரின் பூட்டி அறுக்கப் பெற்ற நாவுகள் ஒப்ப துருத்தி ஓங்கரித்து கொலைச் சிந்து பாடிவரும் சதிர்வெளி அணங்குகள் தானியங்களில் தோலுரிக்கும் உலக்கையோடு ஆடும் சரங்குத்தி அடவுகள் வழி.உலக்கை பெண் ஏந்தும் ஆண்குறி

பாதங்களை முலைகளாக்கி பேசும் படிமம் உற்றுமேயும் கண்களை மிதித்து கடக்க விழைந்து முற்றிய சுரைக்குடுவைகளாய் ஈரந்தீர்ந்து தன்வயமாய் சதைத்து பிறழும் காட்சியும், பின்னர் இறுதியில் ஆதித் தாயின் சுடர் கடத்தும் திரிகளாய் பரிணமிக்கும் பயணமும் அடையாள அரசியலுக்கு (Identity Politics) எதிராக வளர்சிதையென காட்சியுறுகிறது

குரவைக்கூத்து, குடக்கூத்து,வரிக்கூத்து ,வெறியாட்டு என வழங்கப் பெறும் 11 வகைக் கூத்துகளில் வெறியாட்டு சாரங்களை ,முறுவல்,சயந்தம், செயிற்றியம் போன்ற நாடக நூல்களில் குறிப்பிடப் பெறும்  எண்வகை மெய்ப்பாடுகளாம் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை தனை அணங்குகளின் பாவங்களாய் நிகழ்த்தும் கலை.

சரித்திரத்தின் பேசாப் பக்கங்களை பதிய முனையும் காட்சிகள் பிரதானமானவை,நீல நிறம் இச்சையின் விருப்பின் நகல்சின்னம் என்ற பாவிப்பில் நீல நிற பர்தாவுக்குளிருந்து திமிர்ந்து மணலெழுதி ,சொல்லற்ற குற்ற சாசனத்தில் பார்வையாளனின் பெயரெழுதும் காட்சியும், மேலாடையற்ற காலமும் பின் அதிகாரக் குரலுக்கு இடையாடையின் நாடா மீது வைத்திருக்கும் நடுங்கும் கரங்களும்,பறித்து மறுக்கப் பெற்ற கள்ளும் (சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே/பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே-ஔவை) சுயமும் மீளக் கேட்கும் அணங்கின் கதறலும்,முளை அடித்தலெனும் சடங்கின் காட்சியும் பின்னர் அணங்கானவள் அம்முளையொன்றை உருவி விடுவித்துப் போவதுவும் முறம் சிறகாவதும்,வதிவிடமும் வனமும் தோட்டக்களால் கற்பிழந்த பின் காவுகளுக்கு தாபித்து நீளும் உதிர நாவுகளாய் விளக்குமாறுகளும், செதுக்கிச் சீவிய பனங்கருக்குக்கு பலிப் பொருளான நெகிழுடலிகள் அணங்காகி ஈமச்சுடுகோலாய் ஏந்தி வருவதுவும்,  உப்பு உடலிகளின் பித்தப் பாடல் விசும்பலின் பாஷையென்றாகி நெக்கு விட்டு நிலம் புலர்த்தும் சொல்லுறுதி விளிப்பும் பழங்குடியினரான தோடர்கள் மற்றும் உப்புக்குறவர்களின் பிறப்புச் சடங்கின் பாகமாய் காற்றில் படர்கிறது.உப்புரசி உடல் கழுவும் சடங்கை பேசும் பைபிள் குறிப்பு (எசேக்கியேல் 16:4) சமூகங் கழுவுவதான உட்கிடை கிளர்ந்தெழ  உவர்மண்ணின் சாரம் பேசும் நெய்தல் குரல், ஈழத்தின் பதுங்கு குழிகளில் இருந்தும் மீனவக் குடில்களின் இராப்பாடலாயும் பிசுக்கோடு களிம்பாய் கசிகிறது.  

நவீன கூத்துக் கலையின் விசுப்பலகையற்ற முத்திறப்பு அரங்கில் பாத்திரம் ஒவ்வொன்றுக்குமான “கிரிக்கி”யும் குன்றாமல் நிகழ்த்தப் பெறுகையில் பௌத்திக எல்லைகள் தம் பாசாங்குகளைத் துறந்து நிர்வாணிகளாகின்றன.

உருவிலிகளின் ஒளி உடலிகளாய் ,பதிலிகளாய் அணங்குகளின் தலைமுறை தோறுமான பயணம் நிகழ்த்துவெளியாய் தம் உடலே கொண்ட நடிகர்களின் உடல்மொழிவழி நிறுவப் பெறுதல் நகரும் அரங்கின் மாற்றுலவி கோட்பாட்டில்.

தொடர்பொழுங்கற்ற கதை சொல்லும் னான் லீனியர் முறை ஒரு நனவிலி சுழற்சியாகவே பன்மொழிவெளி மற்றும் பரந்துபட்ட கலாச்சார பின்புலம் கொண்ட வழிமுறையாய் அமைந்து வருகிறது. இவ்வகைமையால் இடம் வெளியாக விரிந்து பிரதியின் புனைவெளி  காலவெளிச் சேர்க்கையால் அகவயமானதாயும் பரிணமிக்கிறது

. தொழிற்படும் மொழி ,லிபி உடையதுவும் லிபியற்றதும் ஆன பிணைப்புருவாக்க வடிவமாய் –(ஹைப்ரிட்), அமைத்திருக்கிறார் கூத்தாளர் பூபதி. 5000 ஆயிரம் ஆப்பிரிக்க மொழிகளில் எழுத்துரு கொண்டவை 83 குழு மொழிகளென்கிறது ஓர் கூட்டாய்வறிக்கை.சினுவா ஆச்சிபியும், சொலெங்காவும் தமது கதை மற்றும் நாடக வடிவங்களை இனக்குழு மற்றும் பிரதேச மொழிக்கட்டுமானங்கள் ,சமிக்ஞைக் குறிப்புகள் கலவிய வசனங்களால் கட்டமைத்தார்கள்.அவ்விதமே பின் காலனித்துவ கோட்பாட்டாளர் ப்ராண்ட்ஸ் ஃபனான் முன்வைக்கும் புற கலாச்சார ஊடுருவலற்ற தொன்மவியலாம் பின் அ-காலனித்துவ அழகியல் (post-indiginist aesthetic) மிக நெருக்கமாய் புழங்கும் மொழி ஊடகத்தை தேர்ந்து தகுமொழி வழக்கில் வழங்குகிறார் முருகபூபதி

நிகழ்கூத்தெங்கும் பயனுறும் இசை தொல்லிசையின் ஒப்பொலிகளை கொண்டிருக்கிறது.நாடோடிகளாய் பிரிந்த ஆதிகுடிகளுடைய இசைக்கருவிகளின் சேர்ந்திசையில் பிணைகிறது வனப் பறவையின் குரல்.சச்சரி,கொக்கரை,தக்கை,கத்திரிகை,கறங்குதுடி,படகம்,தண்ணுமை,தாளம்,தகுணிச்சம்,கிணை,சல்லரி,மத்தளி,பேரி,வலம்புரி போன்ற தமிழரின் இசைக் கருவிகளின் ஒலி சமானங்களை உலகெங்கிலும் இருந்து கண்டுகொணந்திருக்கிறார்.அண்டலூசியனின் ப்ளெமிங்கோ இசை மரபுடன் இணைந்த ஜிப்சிகளின் சாம்ப்ராஸ் மற்றும் சாம்ராஸ் நடன வடிவத்தின் லயம் முருக பூபதியின் ”தொங்கல்”-லோடு ஆப்பிரிக்க நாடோடி இசைவாத்தியமான பிடிலுடன் இழைந்து வருவதும்,தாய்லாந்து தவளைச் சப்த வாத்தியமும் வினோத வெளியில் தொலையவும் மீளவும் உதிரத் துடிப்பில் கடிவாளம் பொருத்தி விண்செலுத்துகையில் அந்தரப் பல்லியம்*


குறியீடுகள்,முத்திரைகள் மற்றும் சின்னங்கள் மாற்று சாராம்ச புலத்தின் வேர்த் தூவிகள். நம்பிக்கைகளின் மீது விரியும் புனைவு வெளி கதைகளை உருவாக்குகிறது.கதைகளின் ஒழுக்க விதிகள்,அறமொழிவுகள், குற்றம் மற்றும் தண்டனை வரம்புகள் ஒரு மாய வட்டத்தை வரைகிறது. ஊடுருவல்கள் அவ்வட்டத்தை அழித்தெழுதுகையில் கலாச்சார தனித்துவம் (cultural significance) தொலைந்து ஆதார நம்பிக்கைகளில் வாழ்வியலில் மாற்றங்கள் நிகழ்ந்தேறுகின்றன.உலகப் பொதுவான வழிபாட்டு முறைதனை கடவுளரை திணிக்க சிறுதெய்வங்கள் மீதான சாட்டுகள் பெருக்கி மேலைத்துவமே பிரபஞ்ச மூலம் என்னும் காலனித்துவ நீட்சிகளுக்கு எதிரான ஆதிச்சடங்குகள், மூதாதையர் வழிபாட்டு மூலகங்களை மீளக் கட்டமைக்கும் நிகழ் புலம் நெடுக ஓர் கண்காணிப்பு உடலிகளின் கூட்டு வலம் காட்சியுறுவது நுண்அவதானம் கோரும் கூறு.
நினைவு மீட்கும் காட்சி அடுக்குகளில் மாறியபடி இருக்கும் காலம்,தேசவெளி, மதங்கள் பிணைக்கும் சங்கிலிகள் கடந்து அதிகாரம்/அடிமை நிலை, மேற்கு/கிழக்கு, பெரும்பான்மை/சிறுபான்மை, போன்ற எதிரிடைகள் ,இரட்டை நிலை கடந்து கீழைத்துவம் (ஓரியண்டலிசம்) வழி விடுதலையை அடையும் மூன்றாம் வெளி (Third Space)குறித்த பிரக்ஞையை மீளெழுப்ப விழைகிறது.

நிகழ்கூத்து முடிந்த பின்னும் விதைக்கூடு சலங்கையும் ஆப்பிரிக்க பேய்ச்சுரை வாத்தியமும்  உடலின் ஒளிவெளியில் ,கடத்தப் பெற்ற அணங்கின் ரோம வாசனையுடன் தொற்றிக் கொண்ட உயிரியாய் அதிர்ந்தபடி இருக்கிறது

ஆர்த்தன தடாரி,பேரி:ஆர்த்தன முருடு,மொந்தை:
ஆர்த்தன உடுக்கை தக்கை ஆர்த்தன படகம் பம்பை
ஆர்த்தன முழவம் தட்டை ஆர்த்தன சின்னம் தாரை
ஆர்த்தன காளம் தாளம் ஆர்த்தன திசைகள் எங்கும்

என்பதாக …. 


குறிப்பு: * அந்தரப் பல்லியம் :- இன்னியம்,பல்லியம் வரிசையில் வானில் ஒலிக்கும் பழந்தமிழ் இசைப் பகுப்பு


(எழுத்தாளர் பாலைநிலவன் கொணர்ந்திருக்கும் நீட்சி சிற்றிதழில் வெளி வந்திருக்கும் கட்டுரை)

2 comments:

பனி said...

அருமையான எழுத்து நேசன்.சீரான ஓசை நயம்.உங்கள் படைப்பில் மற்றொரு அழுத்தமான பதிவு.

பனி said...

இந்த விமர்சனத்தின் பின்னால் உள்ள விஷயஞானம் அசத்துகிறது நேசன்.