சுழலும் அழல்விழிக் கொள்ளிவாய்ப்பேய்
சூழ்ந்து துணங்கயிட்(டு) ஓடிஆடித்
தழலுள் எரியும் பிணத்தை வாங்கித்
தான்தடி தின்றணங்(கு) ஆடுகாட்டிற்
கழலொலி ஓசைச் சிலம்பொலிப்பக்
காலுயர் வட்டணை இட்டுநட்டம்
அழல் உமிழ்ந்(து) ஓரி கதிக்க ஆடும்
அப்பன் இடம்திரு ஆலங்காடே
-காரைக்கால் அம்மையார்
***
நகரத்தின் தாள்பாளாய்
ஒரு நாளிறுதி கூட்ஸ்ரயில்
தேதி தப்பிய
ஈரப்பிண்டங்களுடன்
ஒளி-விடம் ஏகும்
துருப்பிடித்த மரவட்டை
உலைகசியும் நிலத்தில்
ஐயம் மிடறாகும்
நல்லன்பு முத்தம் வெளிறிய க்யூரியின்
உதிரத்தட்டுகளில்
க்ரோசோவாவின் துர்கனா
எயினர் கொற்றவையின்
செவ்வீறென
கதிர் கீறி நறுக்கிய மகவுடல்
மேக்பை பறவை
நஞ்சூறும் உலோக முலைகளில்
பிம்பம் விழ தன் கூட்டுச் சுள்ளிக்கு
மெல்லெலும்புகள் காவியபடி
வெப்பாழி
பூப்பெய்தும் செவ்வூழி தன்
மறுமைத் திருநாளோய
பின்னமுற்ற ராட்டினமாய்
நோவா பூமி
வெள்ளாவியிட்ட மஜ்ஜைகளோடு
சுரைநெற்றுக் கருவறைகள்
தலைக்கு மேல் மரங்கள்
விதைக்கும் பதிற்றாண்டுகளில்
செனான் நீல
சித்திரக் குள்ளர்கள்
தவிட்டு குரோம்சோம்களோடு
அதிரூபர்கள் ஜனிப்பர்
நம் சிறார் கதைகளின்
கார்ட்டூன் ராட்சதர்கள்
சினேகிக்க
பிரார்த்தித்தபடி பெய்யக் கூடும்
தங்கம் குழைத்த மழை
குறிப்பு : - ஹெபலோமா சிரியன்ஸ்- பிரேத வேட்டைக் காளான் என்று வழங்கப்படும் மாமிசத்தின்னி காளான் வகை
2 comments:
Wow!
//வெள்ளாவியிட்ட மஜ்ஜைகளோடு
சுரைநெற்றுக் கருவறைகள்
தலைக்கு மேல் மரங்கள்
விதைக்கும் பதிற்றாண்டுகளில்//
nallaayirukku anna...
Post a Comment