Friday, August 5, 2011

மூன்று கவிதைகள்

குழியேகும் எறும்புகள்
**********************************
தகனச் சாமத்தில் அழுகை தீர்ந்து
உறங்கும் மகளை எழுப்புகிற நாயின் ஊளை
படர்த்தும் நடுக்கத்திற்கு
எரியும் ஒற்றை விளக்கு அணையாமல்
திரவமூற்றும் கரம்
வேண்டியிருக்கிறது ஒரு மெல்லிய
அணைப்பிற்காக

தீராச் சமர்களின் விரை தீர்ந்த ஆயுதங்கள்
தலைதிருப்பப்படும் மௌனம்
மகுடிகளைப் போல் இயக்குகிறது
பிடாரனனின் காலடி அதிர்வுடன்

கசாப்பின் மரமேடை கழுவப் பெறுகிறது
துணுக்குகள் மீதமிருக்கின்றன குழிகளில்
முள்மரங்களில் ஏறும் சாரை வளைவுகளுடன் இல்லை
குழியேகும் எறும்புகள்

பிண்டத்துண்டங்களுடன் வெளியேறும்
உதிரத்தின் கவிச்சை தாள
இயலாததாய் இருக்கிறது
சுகித்த பாகங்களை அறுத்தெறியும்
கசப்புடன்
******************************
கூகுளில் தொலைந்தவள்
__________________________
தலைப்பிரட்டைகள் தம்மை மீன்களல்ல என்று நம்பத்துவங்க.. வேண்டி இருக்கிறது ஒரு பருவத்தின் முந்தி விந்து விடும் ஆகாசம்
மைக்ரேன் தலையர்களின் தியானம் மரப்பட்டைகளின் கீழ் வாழும் புழு நெளிவு
பாலித்தீன் பைகளுக்குள் அடரத்துவங்கிய வேர்கள், கால் நுகர்ந்து பின்தொடரும் நாய்குட்டிகள் மீட்பனோ எண்ணழிந்த ரிமொட்டின் பொத்தானாய்
சேவற் கொண்டைப் பூக்கள் காத்திருக்கின்றன அடுத்த மரணத்திற்கு காத்திருக்கும் வெட்டியானின் சாராய புட்டியென.,
தன்னை வதைத்துக் கொள்ளும் மனப் பிறழ்வுற்ற பெண்ணின் பேரோலம் உலுக்கி விழிப்பைத் திணிக்கிறது விரல் சுவைத்து உறங்கும் மகவில்
சில தகனங்களுக்கு தேர் வருவதில்லை உன் ஆன்மா அமர நாளிலேனும் அமைதியுறட்டும்
*************************************************
எடுத்த இடத்தில் வைக்க முடியாத சொல்

விருந்தினள் உடுப்பிலிருந்து
உதிர்ந்து விட்டிருக்கும் பொத்தான்
எடுத்த இடத்தில் வைக்க முடியாத சொல்

தற்கொலைக்குத் திட்டமிடுவதைப் போல்
படுக்கை விரிப்புகளை நீவிக் கொண்டிருக்கும்
கரத்தின் நடுக்கம்
சிறகசைக்காமல் நடந்து பழகாத பறவையின்
கால்கள்

செத்த முத்தத்தின் கவிச்சிக்கு விரையும்
நாய்கள் தம் நகங்களில்
உதடுகளுக்குரிய பற்களைக் கொண்டிருக்கின்றன

மீண்டும் பொருத்த முடியாத கரத்தினைப்
போன்றதல்ல
எடுத்த இடத்தில் வைக்க முடியாத சொல்

9 comments:

மதுரை சரவணன் said...

nallaa irukku thalaivaree... vaalththukkal

Dr.எம்.கே.முருகானந்தன் said...

"..செத்த முத்தத்தின் கவிச்சிக்கு விரையும் நாய்கள்.."
சுவையான வரிகள் பல..

சே.குமார் said...

Kavithaigal moondrum MUTHTHUKKAL.

ஹேமா said...

நேசன்...ராத்திரியே படிச்சிட்டேன் இரண்டு மூன்று முறைகள்.
வார்த்தைகள் மனதுக்குள் விழுகிறது.கனகாலமாச்சு உங்கட கவிதைகள் வாசிச்சு.அப்ப போலத்தான் இப்பவும்.புரிஞ்சும் புரியாம என்ன சொல்லல்லாம்ன்னு சொல்ல வரல.ஆனா கவிதை பிடிச்சிருக்கு.கடைசிக் கவிதை முழுசா விளங்கிச்சு.விலகினது விலகினதுதான்.மனசும்கூட.
அப்பிடித்தானே !

நேசமித்ரன் said...

நன்றி சரவணன்

நன்றிகள் சார்

சே.குமார் நீண்ட காலத்திற்குப் பிறகு வருகை. மிக்க மகிழ்வும் நன்றியும்

ஹேமா

நைஜிரியா வந்தாகி விட்டது . இனி கவிதைகள் தொடர்ந்து எழுதக் கூடும் .கடைசிக் கவிதை அப்படியானதுதானே :) மிக்க மகிழ்ச்சி ஹேமா எங்கெங்கு சுற்றி வந்தாலும் ஏந்திக் கொள்ள கரமிருக்கும் வீடு அற்புதமானதுதானே. ஏந்திக் கொள்ளும் கரம் இருக்கும் வரை கவிதைகள் வரும் :)

Nundhaa said...

குழியேகும் எறும்புகள் - மிக அருமை

நேசமித்ரன் said...

நன்றி நந்தா :)

vidivelli said...

தீராச் சமர்களின் விரை தீர்ந்த ஆயுதங்கள்
தலைதிருப்பப்படும் மௌனம்
மகுடிகளைப் போல் இயக்குகிறது
பிடாரனனின் காலடி அதிர்வுடன்...

திருப்பி இரண்டுதடவை வாசித்துத்தான் சிலவற்றின் கருத்துகள் புரியமுடியவில்லை...

நீங்கள் விதைப்பதெல்லாம்.. உடனும் புரிய முடியாத கவிதைகள் தானே
அருமையான கவிதை...


கசாப்பின் மரமேடை கழுவப் பெறுகிறது
துணுக்குகள் மீதமிருக்கின்றன குழிகளில்
முள்மரங்களில் ஏறும் சாரை வளைவுகளுடன் இல்லை
குழியேகும் எறும்புகள்/

இது கொஞ்சம் புரியல...

யாழினி said...

கசாப்பின் மரமேடை கழுவப் பெறுகிறது
துணுக்குகள் மீதமிருக்கின்றன குழிகளில்
முள்மரங்களில் ஏறும் சாரை வளைவுகளுடன் இல்லை
குழியேகும் எறும்புகள்.......

மிக அருமை