Sunday, May 8, 2011

வெள்ளைப் பல்லி விவகாரம் - ஒரு வாசகப் பார்வை


There is no hope
There is only permanent struggle
That is our hope
That is a first sentence
In the language of madness

-David Cooper


Psychopathography  என்பது எழுத்தின் வழி கலைஞனின் மனச் சிதைவுகள் மற்றும் துயரார்ந்த வாழ்வியலின் தாக்கத்தை பதிவு செய்யும் வழிவகை.வெள்ளைப் பல்லி விவகாரம் தொகுப்பு அத்தகைய குறிப்புகளின் மூலம் நிரப்பப் பெற்றிருக்கும் கதைகளால் ஆனது.தொடர்ந்த இடையூறுகளும் நோய்மையும் சதா துளைத்தபடி இருக்கும் துர்/ நல் மற்றும் பகுப்பற்ற கனவுகள்.தொகுக்கவியலாத அபத்தங்களின் அலறல்களால் நிரம்பிய நனவிலி உலகத்து நுண் சிதைவுகளின் நடனத்தை புகை சித்திரமாக்குகிறார் லக்ஷ்மி மணிவண்ணன்.

 ஹாருகி முராகமியின் புனைவுலகத்திற்கு அணுக்கமான கூறுகளை கொண்டிருக்கிறது மணிவண்ணனின் படைப்பு வெளி ,கனவு மற்றும் நிகழ் தூரங்கள் அருகியதொரு வெளியை மொழிவழி விரிக்கும் சொல்முறை மட்டுமன்றி வாதைகளை /உடல் சிதைவை/நம்பிக்கைகள் ஈனப் படும் தருணங்கள் சித்தரிக்கப் படும் வகைமையிலும். முராகமியின் - The Wind-Up Bird Chronicle நாவலில் மால்டா கானோ சகோதரிகள் எய்தும் உடல் வதை வெள்ளைப் பல்லி விவகாரம் கதையில் கனவுக்குப் பிறகான உதிரக் கட்டுகளும் சிராய்ப்புகளுமாக தொடரும் வலியும்/ சிகிச்சைகளும்… புனைந்து கொண்ட பிம்பங்கள் மற்றும் தோற்ற மயக்கங்களின் வழியே கதை சொல்லுதல்.ஒரு மாயப் புல்லாங்குழல் செய்ய பூனைகளின் ஆன்மாவை சேகரிக்க அவற்றின் இதயம் உண்ணும் Kafka on the shore வரும் ஜானி வாக்கர் ,வெள்ளைப் பல்லியின் மீதான கார்த்தி கொண்டிருக்கும் காரிய வேட்கையை அகவயமான ஒப்பீடுகளுக்கு திறந்து தருகிறான்.

பிறழ்வு நிலையின் (Schizophrenic) குரலால் தன்னிலை திரிதல் மற்றும் சமூகத்தின் மீதான பார்வைகளை முதல் வாசிப்பில் தரும் இந்தக் கதைகள் புனைவின் வெளியில் மிக நுட்பமான பின்னல்களில் வைத்திருக்கும் அரசியல், உடலின் கவிச்சை வீசும் மின்சார சுடுகாட்டின் புகைப் போக்கிக்கு காதுயர்த்தும் வளர்ப்பு நாய்.


அடிமைத்தனம் – விடுதலை,நனவிலி – பிரக்ஞை என்ற அந்தரக் கோடுகளில் மனித இருப்பு,சுயம் மற்றும் அடையாளம் என வரைவுகளுக்குள் உலவும் உலகாயப் போதாமைகள் நிரம்பிய பிம்பங்களை எழுதி இருக்கிறார் லக்ஷ்மி மணிவண்ணன்.
கவிதைகளின் குறியீடுகள் வழி பிணைக்கும் மாய வெளியை தன் தேர்ந்த சொல்லாடல்களால் கதை மொழியாய் விரித்திருக்கும் உத்தி புத்தனுபவம்.

மிகச் சரியான கதை சொல்லியிடம் சொற்கள் மெய்யாகவே தனித்துவத்துடன் செயல்படுகின்றன, கார்ப்பரேட் குழு வாழ்வியலில் பன்மை முன்பான சுயத்தின் அகவய பிறழ்வுகள் கொண்ட  பாவ விருப்பங்களின் கயமையையும் இருளில் விரியும் குரூர தாபமும்   ஒருங்கிசைத்தபடி அந்தரங்க கசிவுகளில் உருவாகும் ரோமத்தின் சிடுக்காய்
பிசுப்பதை பிரதிக்கு கடத்துகிறார் .அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறுவெண் பல்லி ஆகிறது தானுமான நிழல்.


அனுமதிக்கப் பெற்ற வெளிக்குள் உடலம் குறுக்கி சமூகத்தின் புனிதக் கூண்டுகளுக்குள் துய்த்து உய்தலின் உன்னத விலங்காக தன்னை பொருத்திக் கொள்ள வியலாத நிபுணத்துவம் குன்றிய விளிம்பு நிலை உயிரி சுமத்தப் பெற்ற பிம்பங்களில் இருந்து தனக்காய் சிருஷ்டித்துக் கொள்ளும் மொழி இப்படியாகத்தான் இருக்கும்.பொருளியல் சார்ந்த சுயம் மற்றும் பிரகடனத்திற்கு அப்பாற்பட்ட இருப்பின் சிக்கல்கள் (cognitive bias) .முடுக்கப் பட்ட தீர்மானங்களின் காந்த வெளியில் நகர்தலில் விருத்த சேதனம் செய்யப் பெற்ற /விதை நீக்கப்பட்ட கனிகளாய்  அடையாள/வாக்காள அட்டைகள் திணிக்கப் பட்ட கரங்களுடன் நின்று கொண்டிருக்கும் யாரோ ஒரு நான் அலாரத்தின் ஸ்நூஸ் பொத்தானை அழுத்துவதன் மூலம் நீட்டுவிக்க முடிகிற கனவாய் இருக்கிறது ஆண்டன் செகாவ் மற்றும் மண்பாண்டம் போன்ற கதைகள்


நூதன கதையாளனின் திரிந்த பிரக்ஞை , திணிக்கப் பெறும் சீழ்மை மீதான ஒவ்வாமை,அதீதத்தின் விளிம்பில் நின்று பேசும்
மீபொருண்மை பாரத்தின் சூதாட்ட நகர்வுகள்.அன்றாடனை திணை மாற்றும் நவீன வாழ்வியலின் மீதான எள்ளலை,துயரத்தின் மீதான துச்ச நினைவை ஆதிவாசியின் விஷம் கொல்லும் விஷமாய் புனைவாக்குகிறார்.அந்தரங்க இருள்வெளியில் கொலைத்து புதைத்திருந்த பிரேத மேடுகளை தடவிக் கொண்டே கடக்க வேண்டியிருக்கிறது இணைய மையங்களின்
ஆசனங்களில் சிந்தியிருக்கும் விந்தின் பிசுப்பை தவிர்த்து விட்டமரும் நாகரீகத்துடன்.

செகாவ்- ஆறாவது வார்டு சிறுகதையில் வரும் நிகிதாவும் ,இவானும்,யெஃபிமிட்சும்,டார்யுஸ்காவும் உலவ ”Kill the reptile! No, killing's too good. Drown him in the midden-pit” என்ற பித்தேறிய சொல்லாடல்களும் பால் மாற்றி பார்க்கும் புறக்கணிக்கப் பெறும் காமமும் இத்தொகுப்பில் வரும் சித்திரக் கூடம்,வெள்ளைப்பல்லி விவகாரம் கதைகளில் மனிதர்களுக்குள் புழங்கும் உணர்வுகளும் ஆக பாழ் வெறுமை (void) மற்றும் மனதின் வரம்பற்ற சுயமெய்யியல்புத் தன்மையை பிரதிபலிக்கின்றன.கூட்டாக (Thusness) என்று மொழியத்தக்க தனியொருமை நிலையில் வாசக மனதை நிறுத்துகின்றன.

முரண் மெய்மை (paradox) எய்துவதற்கான பிரயத்தனங்களுடன் (non-duality) இரண்டகத்தன்மை கடக்கும் உணர்வு நிலைகளின் பிரம்மாண்ட தன்முனைவுகளை சொற்களால் நகர்த்துகிறார் கதை சொல்லி நம்மையும் தன் நிழல் படரும் திரையாக்கி.(Impersonal Womb) உருவகக் கருப்பையினுள் நெளியும் சிசுவின்  (Cosmic body) பிரபஞ்ச உடல் தனது சிதைவுறுப்புகளுடன் நிகழ்த்தும் பயணமாய் இருக்கிறது,நிரப்பிகளாய் சமூக -அரசியல் -உடல் – இரை –மரணம் என அடுக்குதல்களுக்கான (polysemous) திறப்புகளுடன்.


டேவிட் கூப்பரின் மனநோயாளனின் மொழி,வாழ்தலின் இலக்கணம்,குடும்பத்தின் மரணம் எங்கும் விரவியிருக்கும் அமிலச்சாரலடிக்கும் கழிப்பறை துப்புரவாளனிடம் குடித்துவிட்டு எழத்தோற்கும் மதுவிரும்பியின் குரலை, தொனியை .. வெற்று எள்ளலோடு நின்று விடாமல் மாற்றுகளின் மீதான வெளிச்சக் கசிவை விந்தி நடக்கும் சூம்பி குருதி உறைந்த போலியோ கால்களின் ஈயத் தாங்கிகளோடு தன்னியல்பு மாறாமல் பேசுகிறது மணிவண்ணனின் கனவு மொழி.கதைகளுக்கிடையே ஆன கால வெளி மற்றும் பகுப்பு சொற்கட்டமைவுகளில் கதைதோறும் புதிய தளர்வுகளையும் வாக்கியங்கள் ஊடே மெல்லிய உயவையும் விட்டுச் செல்கிறது.

எதிர்பாராத்தன்மையும் கனவின் விசித்திர சகுனப் பிணைப்புகளும் (fusion of instincts)  கொண்ட வாக்கிய அமைப்புகள் நம்மை வேர்களில் இருந்து துண்டித்து கவிதானுபவம் மிளிர அழைத்துச் செல்லும் பித்தர்களின் கலக உலகம் pathological nucleus.
தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றவுணர்வின் வாதை விரவ புறக்கணிப்பின் நிரந்தரமான நிலையின்மையில்(perpetual uncertainty) உழலப் பழக்குகிறார் மணிவண்ணன். (Mario Benedetti) மரியோ பெனெடெட்டியும் (Raymond Clevie Carver) கார்வரும் உருவாக்கும் குறியீட்டு சித்திர நடை வசப்பட்டிருக்கும் மணிவண்ணன் விர்ச்சுவல் அப்செஷன் என்றழைத்துக் கொள்ளக் கூடிய தன்மையில் இருந்து தன் பாத்திரங்களை சூழல்களை புனைவாக்கியபடி இருக்கிறார்   


நுட்பமான வாசிப்பில் தாயிழப்பின் வதை நிறைந்த பிரபஞ்சம் உருவாக்கும் வெற்றிடத்தை நிரப்பும் உணர்வு வெளியிலிருந்து கிளைக்கின்றன இருப்பின் ஒவ்வாமையும் பனைக்காட்டின் தேரிநிலத்து வெக்கையும் வழியும் கனாவின் சன்னத மொழியில் எழுதப்பட்டிருக்கும் இச்சொற்கள்.அணுக்கமான பார்வையில் பித்து நிலைக்கும் மனப் பிறழ்வுக்கும் இடையே இருக்கும் தீர்க்கமான சமிக்ஞைகள் வழியே தர்க்கமற்று தகர்க்கும் பூக்கோவின் அதிகாரம் குறித்த கோட்பாட்டை நிறுவுகின்றன .

பித்து நிலை என்பது தொடர்பிலியாக/பிரக்ஞையின் சிதைவாக உணரப் பெறுவது எனில் அவ்வாதையை பகிர்தலின் மூலமான பொதுமைப்படுத்துதல் வாயிலாக அந்நிலையை பொய்யாக்குகிறார் கதைசொல்லி. இக்கதைகள்  நிகழ் இருப்புக்கும் நனவிலிக்கும் இடையில் அலைவுறும் கதைகள் எந்திரங்களின் மியூசியத்தில் ஒலிக்கும் ஒற்றைப் பறவையின் குரல்.

ஆனால் பித்துநிலை/கனவுனிலை எழுத்து என்பது மனவோட்டத்தின் செதுக்கப்பட்ட மொழிப்படுத்துதல்/துணைப் பிரதி என்பது கடந்து
தன்மொழிதலின் விசித்திரங்களையும் அறியா அக/புறவெளிகளில்
பயணிப்பதாயும் அமைதல், நிறுவனங்களுக்கிடையே/மனித உறவுகளுக்கு இடைப்பட்ட / மனம் பிறழ்ந்தவருக்கும் சமூகத்திற்கும் இடையே உருவா(க்)கும் வெளிக்குரிய காரணிகளை இந்நிலையில் இருந்து பேசுதுதல் எளிதும் அவசியமானதும் கூட என்பவையும் அவதானத்திற்குரியதாகிறது. தன்னிலை திரிபு/நிகழா விருப்புகள்/புறக்கணிப்பின் எதிரசைவு /பால் மாற்று/கையறு நிலைப் படும் மனச்சுருக்கம் கொண்ட உடல் என விரிவான வெளியில் இயங்கியிருக்கும் கதைக்களன் பிரதிபலிக்கப் பெறும் சமூகம் என்பதைக் கடந்து மீறலின் தீவினைகளை தனிமனித/குழு ஒழுங்குகளின் தகர்வுகளையும் பேச விழையலாம்.

சாத்தானைக் காட்டி தேவதையையும் ,தேவதைகளைக் காட்டி சாத்தானையும் புனைவாக்குகிறார் பித்தும் பிறழ்வும் கொண்ட கதையாடல்களில்.,சுய சித்திரத்தை அடைய மரித்தலும் குழந்தைமையின் குரலை பைத்தியத்தன்மையின் குரலில் நிகழ்த்திப் பார்த்தலுமாய் மற்றமையின் நோய் விரட்டும் கதைசொல்லி சாராயக் கடையின் புனித சாத்தான் பிம்பத்துக்குள் ஒளிந்திருக்கிறார்.

(இந்த கட்டுரை கல்குதிரை இதழில் வெளிவந்து,நாகர்கோவிலில் சிலேட் இதழ் சார்பாக நிகழ்ந்த விமர்சனக் கூட்டத்தில் வாசிக்க நிரல் பெற்றது 07-04-11)

7 comments:

மிருணா said...

மனதின் பல்வேறு 'நான்கள்' வெளிப்படும் ஒரு பிரதியை, பல்வேறு வாசிப்புத் தளங்கள் துலங்க நம்பவியலா சிறப்புடன் கூடிய தனிமொழியோடு ஒரு பல்வண்ண உருக் காட்டி போல துலங்கச் செய்துள்ள எழுத்துக்கு salute! மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிற எழுத்து. பார்வைகளை விரித்துப் போகும் எழுத்தும்.

நேசமித்ரன் said...

நன்றி மிருணா தங்கள் வருகைக்கும் ஊட்டமிகு சொற்களுக்கும்

pani said...

\\அடிமைத்தனம் – விடுதலை,நனவிலி – பிரக்ஞை என்ற அந்தரக் கோடுகளில் மனித இருப்பு,சுயம் மற்றும் அடையாளம் என வரைவுகளுக்குள் உலவும் உலகாயப் போதாமைகள் நிரம்பிய பிம்பங்களை எழுதி இருக்கிறார் லக்ஷ்மி மணிவண்ணன்.//
ஒரு படைப்பை ,படைத்தவனின் முழுமையோடு பெற்றுக்கொள்ள முடிவது அபூர்வம்.ஏன் எனில் ,படைத்தவனின் அகவுலகம் படைப்போடு கொண்டுள்ள ஆழம் வெளிபட்டதைவிட தீவிரமானது.அந்த கோட்டுடன் இணைந்து செல்லும் வாசக மனம் அபூர்வம்.
நேசனின் இப்பார்வை,இந்த படைப்பிற்கு ஒரு முக்கிய பதிவாக இருக்கும்.

pani said...

\\தொடர்ந்த இடையூறுகளும் நோய்மையும் சதா துளைத்தபடி இருக்கும் துர்/ நல் மற்றும் பகுப்பற்ற கனவுகள்.//
\\தொகுக்கவியலாத அபத்தங்களின் அலறல்களால் நிரம்பிய நனவிலி உலகத்து நுண் சிதைவுகளின் நடனத்தை புகை சித்திரமாக்குகிறார் லக்ஷ்மி மணிவண்ணன்.//
\\கனவு மற்றும் நிகழ் தூரங்கள் அருகியதொரு வெளியை மொழிவழி விரிக்கும் சொல்முறை மட்டுமன்றி வாதைகளை /உடல் சிதைவை/நம்பிக்கைகள் ஈனப் படும் தருணங்கள் சித்தரிக்கப் படும் வகைமையிலும்.//
\\அடிமைத்தனம் – விடுதலை,நனவிலி – பிரக்ஞை என்ற அந்தரக் கோடுகளில் மனித இருப்பு,சுயம் மற்றும் அடையாளம் என வரைவுகளுக்குள் உலவும் உலகாயப் போதாமைகள் நிரம்பிய பிம்பங்களை எழுதி இருக்கிறார் லக்ஷ்மி மணிவண்ணன்.//
\\சுயத்தின் அகவய பிறழ்வுகள் கொண்ட பாவ விருப்பங்களின் கயமையையும் இருளில் விரியும் குரூர தாபமும் //
\\ அனுமதிக்கப் பெற்ற வெளிக்குள் உடலம் குறுக்கி//
\\துயரத்தின் மீதான துச்ச நினைவை //
\\தனியொருமை நிலையில் //
\\தாயிழப்பின் வதை நிறைந்த பிரபஞ்சம் உருவாக்கும் வெற்றிடத்தை //
\\பித்து நிலைக்கும் மனப் பிறழ்வுக்கும் இடையே இருக்கும் தீர்க்கமான சமிக்ஞைகள் வழியே //
\\பிரதிபலிக்கப் பெறும் சமூகம் என்பதைக் கடந்து மீறலின் தீவினைகளை //

மனித மனதின் ஆழ்நிலை தேடல் பயம் தருவது.அந்த பய வுலகத்தை எழுதிய லக்ஷ்மி மணிவண்ணன் அவர்களுக்கும்,அந்த படைப்பை தொட்டு பார்த்த நேசனுக்கும் பாராட்டுக்கள்.

போளூர் தயாநிதி said...

\\அடிமைத்தனம் – விடுதலை,நனவிலி – பிரக்ஞை என்ற அந்தரக் கோடுகளில் மனித இருப்பு,சுயம் மற்றும் அடையாளம் என வரைவுகளுக்குள் உலவும் உலகாயப் போதாமைகள் நிரம்பிய பிம்பங்களை எழுதி இருக்கிறார் லக்ஷ்மி மணிவண்ணன்.//படிக்கத் தூண்டுகிற எழுத்து

இரசிகை said...

nalla vimarsanam....

vazhthukal mithran sir.

நேசமித்ரன் said...

நன்றி பனி ,போளூர் தயாநிதி,இரசிகை தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்