கவிஞர் நரனும் கவிஞர் நிலாரசிகனும் இணைந்து கொணர்ந்திருக்கும் சிற்றிதழ் 361 டிகிரி .நேர்த்தியான வடிவமைப்பும் தேர்ந்த படைப்புகள் வரிசைபட்டிருக்கும் உள்ளடக்கமுமாக உருப்பெற்றிருக்கும் இவ்விதழ் 14.05.11 அன்று மாலை டிஸ்கவரி புக் பேலஸ் புத்தகக் கடையில் கவிதாயினி குட்டி ரேவதியால் வெளியிடப் பெற்றது .மாலை 5.30 க்கு குறிக்கப் பெற்ற நிகழ்வு 6.30 க்கு துவங்கியது. இதழை கவிதாயினி குட்டிரேவதி வெளியிட கவிதாயினி கவிதா முரளிதரன் பெற்றுக் கொண்டார்.துவக்க உரையாற்றிய நரன் இதழ் துவங்க காரணியாய் இருந்த முன் நிகழ்வொன்றையும் அதன் பிறகான செயல்பாடுகள் குறித்தும் ஓவியர் ரோகிணி மணியின் அர்பணிப்பு மிக்க உழைப்பில் உருவான ஓவியங்கள் பற்றியும் பேசினார்.இவ்விதழ் தம்மைக் கடந்தும் நகரக் கூடுமெனில் அதன் பாதைகள் திறந்திருக்கும் என்றார் . இதழ் குறித்து கவிஞர் அய்யப்ப மாதவன் பேசுகையில் தன்னைப் பாதித்த படைப்புகள் மீதான சிறுகுறிப்புகளை அடிகோடிட்டு படைப்புகளில் இயங்கும் ஆண்- பெண் மனவெளி மற்றும் வெளிப்பாடு குறித்த தன் பார்வையை பகிர்ந்தார் .
கவிஞர் அஜயன் பாலா தன் உரையில் கடந்த பத்தாண்டு கால சிற்றிதழ் மரபு ,விவாதங்கள் இன்றைய கவிதைகளில் பெயர் நீக்கம் செய்யப்பட்டால் ஒன்று போலவே தோன்றும் கவிதைகள் மீதான தன் விமர்சனத்தை பதிவு செய்தார்.லட்சுமி சரவணக்குமார் தொடர்ச்சியான துயர் பாசாங்குகள் நிரம்பிய தற்கால கவிதைச்சூழலை சாடினார்.கவிதா முரளிதரன் சிற்றிதழ் பார்வை இயங்கு வெளி கவிதைச்சூழல் ,361 இதழின் படைப்புகள் மீதான் தன் பார்வையை வாசித்தார்.குட்டிரேவதி சிற்றிதழ் சூழலில் ஆண்-பெண் கவிஞர்கள் என்ற பகுப்புவாதம் மாறி வருவதையும் முன்னோடிகளில் கோணங்கி இளைய தலைமுறை சிற்றிதழ் வெளியுடன் கொண்டிருக்கும் இணக்கம் குறித்து பேசினார்.அஜயன் பாலா,அய்யப்ப மாதவன் , லட்சுமி சரவணக்குமார் ,கவிதா முரளிதரன் மற்றும் எனது உரை மீது தனது கருத்துகளை பதிந்தார் .விழா சிறப்புற நிகழ்ந்தது.பதிவுலக நண்பர்கள்,சிற்றிதழ் ஆர்வலர்கள்,படைப்பாளிகள்,கவிஞர்கள்,ஓவியர்கள் பலருடன் உரையாட வாய்த்தது.
இதழ் குறித்த என் பார்வை ...
361 - கற்பிதங்கள் மீதான மீறலை தன் பயனர் பெயராய்க் கொண்டு வெளிவந்திருக்கும் இவ்விதழ் துரிதங்களற்ற சுகப் பிரசவ நேர்த்தியுடன் தொப்புள்கொடி கத்தரிக்கப் பெற்றிருக்கிறது. நரனும் நிலாரசிகனும் ஒரு சாய்வுப் பார்வையில் எதிர்நிலை தசமப் பிரதிகள்,பகுத்துக் கொண்டே போகிறவர் ஒருவர்,தொகுத்துக் கொண்டே போகிறவர் மற்றவர்.இந்த பகுப்பு ஒருமுகப்பட்ட தொடர்பொழுங்குடைய என்ற கருத்துருவங்களில் இருந்து துண்டித்துக் கொள்வது.அவ்வகைமையில் இவ்விதழ் வலியுறுத்துகின்ற அறம் வளர்த்தெடுக்க விரும்பும் அரசியல் இணக்கமானதாய் இருக்கிறது.கட்டியம் கூறும் முன்-சொற்களற்று படைப்புகளின் மௌன சமிக்ஞைகளின் வழி விருப்ப வினை நிகழ்த்தும் முதிர்வுள்ள கரங்களை கனம் பண்ணியிருக்கிறது இக்காலாண்டிதழ். ஈழத்தின் வாதையை முன் வைத்து விரியும் படைப்புலகம் தனதேயான குரலை உள்ளிருக்கும் படைப்பாளிகளின் தேர்விலும் தைத்துக் கொண்டிருக்கும் படைப்புகளின் வழியும் மிகத் தீர்மான குரலில் பேசுகிறது. மெய்நிகர் உலகின் மீப்பெரும் பரப்பில் ,இன்னும் செறிவோடு உயிர்த்திருக்கும் சிற்றிதழ்களின் பால்வெளியில் இடைநிலை இதழ்களின் மினுப்பேறிய தாள்களில் தம்மை முற்றும் பொருத்திக் கொள்ளவியலாத நிலையில் உருவான வெற்றிடத்தை நிரப்பி பார்க்கும் அவா ஒரு புதிய சிற்றிதழை உருவாக்க வைத்திருக்கிறது.
எழுத்து என்பதை ஒரு சமூகத்தின் மன இயக்கம்.இதன் நீட்சியாக அறிதலின் மீதான அறிதலை ,தான் நம்புகின்ற வாசிப்பு முறையை நிறுவுதல் ,என்ற இயங்குதளத்தில் தொடர்ச்சியான தேடலை,உழைப்பை,படைப்புத் தேர்வுகளில் நுண்ணிய கோடுகளை வேண்டி நிற்கிறது 361.
எப்பவும் போல் இந்த மாதங்கள் ஒவ்வொரு படைப்பாளனும் தனது முந்தைய கவிதை மற்றும் கதைத்தொகுப்புகளில் இருந்து வெளியேறும் லார்வா பருவம் .அல்லது புதிய வாசிப்புகளால் இன்னும் தம்மை விரிவு செய்யத் தூண்டல் பெறும் காலமென்றும் கொள்கிறேன்.இந்த இதழில் கரம் பிணைந்திருக்கும் மூத்த படைப்பாளிகள் தம் புதிய சொற்களால் மீண்டும் வியப்புக்குறிகளை தக்க வைக்கிறவர்களாய் இருக்கிறார்கள்.
வேற்று மொழிப்பரப்பில் நிகழும் மாற்றங்களை அவதானிப்பாக கொண்டுள மொழிபெயர்ப்புக் கதைகள்.நம் சூழலில் ரீப்லேசர்ஸ் அதாவது பதிலிகள் என்று மொழியத்தத்தக்க சொல்முறையும் இன்மையும் வாதையும் பெருகும் சாம்பல் சாயலுள்ள கருப்பொருளும் அற்று,சுயம் பிரியாத கவிதைகளில் இருந்து விலகி பாசாங்கற்ற துயரை வாழ்வை பேசும் தருணக் கொண்டாடிகளின் உலகை முன்னிறுத்துகிறது.
Mythographic Text என்ற நிலையில் இருந்து disruption & transgression மனவியலில் நகர முனையும் படைப்புலகை ஊக்குவிக்கும் செறிவூட்டப் பெற்ற முன்நகர்வுளை கொண்டிருக்கும் சமகால பார்வையாளர்களை கண்டடைந்திருப்பதுவும் வழிமொழிவதும் நம்பிக்கையூட்டுகிறது.
சுரேந்திர பிரகாஷ் போன்றவர்களின் மறை பிரதிகளை எஸ்.செந்தில் குமார் மீதான இசையின் நேர்மையான விமர்சனத்தை தேவதச்சனின் மொழி மீதான பரிசோதனையை ,கணேச குமாரனின் கவித்துவமான கதையாடலை அ.முத்துலிங்கத்தின் பட்டியலைப் போல் நேர்த்தியாய் தொகுத்திருப்பது பாலிலாக் தன்மையுள்ள நிறைவு.ஓராழ்ந்த பார்வையில் ஆண்மைய சமூகம் நீட்டும் கொடுங்கரத்தின் மீதான பதிவாய் அவல குரலாய் இருக்கிறது சுரேந்திர பிரகாஷின் கதையில் மார்பறுத்துப் போகும் காட்சியும் மனோஜின் சஞ்ஜலாவிற்கு நேரும் வல்லாங்கமும் ரோகிணி மணியின் முகப்போவியமும் குட்டி ரேவதி மற்றும் லீனாவின் கவிதைகளும் ரெக்கரன்ஸ் ஆஃப் இண்டர் டெக்ஸுவாலிட்டி என்ற வகைமைக்குள் அழைக்க முடிகிற பிளசர் ஆப் டெக்ஸ்ட் பிரதி
In a lighter sense இவ்விதழின் பிழைத்திருத்துநர் அன்னா ஹசாரேவால் ஈர்க்கப்பட்டவராய் இருக்க வேண்டும். பெரும்பான்மை இடங்களில் ழ’கரத்தின் கொம்புகளை உடைத்து விட்டிருக்கிறார். தட்டச்சு பிழைகள் ஒற்றுப் பிழைகள் ஓரிடத்தில் சி.மணிக்கு சமர்பித்த கவிதை கேர் ஆப் மணி போல் ஆகி இருக்கிறது. முதல் சொல் மழலை என்றும் குற்றமுள்ள உடல் என்று கிழவன் தஸ்தாவ்யெஸ்கியை துணைக்கழைத்தும் கடக்கிறோம்
ஃபில்லர்ஸ் என வழங்கக் கூடிய இடு நிரப்பிகளற்ற 52 பக்கங்கள் கொண்ட முதலிதழ் இனி வரும் காலாண்டுகளில் கூடுதல் பக்கங்களும்,சுயம் பிரிந்து பன்முகப்பட்ட, மற்றமையை பேசும் படைப்புகளை, உலகமயமாக்கல் மற்றும் அதிகாரத்திற்கெதிரான,மனிதத்தை அதற்கான விடுதலையை பேசும் புதிய திறப்புகளும், என்றைக்கும் கொண்டாடும் படைப்புகளாலும், நிரப்பப் பெற ஆசிரியர் குழுவிற்கும் ,361 க்கும் Performer & Executer பொறுப்புக்கு நகர்ந்திருக்கும் கவிஞர்கள் இருவருள்ளும் இருக்கும் படைப்பாளியை பாதிக்காமலிருக்கவும் நமது உரையாடலை வாழ்த்துகளைப் பகிர்வோம் 
7 comments:
நல்ல பகிர்வு மக்கா. பகிர்விற்கு நன்றியும்!
நன்றிண்ணே !
ஃபில்லர்ஸ் என வழங்கக் கூடிய இடு நிரப்பிகளற்ற 52 பக்கங்கள் கொண்ட முதலிதழ் இனி வரும் காலாண்டுகளில் கூடுதல் பக்கங்களும்,சுயம் பிரிந்து பன்முகப்பட்ட, மற்றமையை பேசும் படைப்புகளை, உலகமயமாக்கல் மற்றும் அதிகாரத்திற்கெதிரான,மனிதத்தை அதற்கான விடுதலையை பேசும் புதிய திறப்புகளும், என்றைக்கும் கொண்டாடும் படைப்புகளாலும், நிரப்பப் பெற ஆசிரியர் குழுவிற்கும் ,361 க்கும் Performer & Executer பொறுப்புக்கு நகர்ந்திருக்கும் கவிஞர்கள் இருவருள்ளும் இருக்கும் படைப்பாளியை பாதிக்காமலிருக்கவும் நமது உரையாடலை வாழ்த்துகளைப் பகிர்வோம்
..... Super! மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
பகிர்வு அருமை. புத்தகம் நன்றாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது. நன்றி!
wishes..........:)
வேலைகளுக்கு நடுவே கவிதைகளை படித்து பின்னூட்டமிடலாம்... புத்தகத்தை பிரித்து வைத்துக்கொண்டு கணிப்பொறியின் முன் உட்கார மக்கள் அனுமதிப்பதில்லை... இன்னும் படிக்காத உயிர்மையும்... இரண்டு கவிதை மட்டுமே படித்த 2 அகநாழிகையும் இன்னும் பிற புத்தகங்களும் அப்படியே இருக்கின்றன...
இருப்பினும் 361 ஒரு ஈர்ப்பை வைத்துக்கொண்டுதான் இருக்கிறது மனதில் :)
எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Post a Comment