Monday, December 21, 2009

தொங்கும் கூடுடைய பறவை

தசை உலர்ந்து சருமம் திரளும் ஆகாயம்
துருவம் துருவி தட்பம் உதிர
வேர்கள் பற்றவியலாத நெளி மணல்
தாவரத்தில் முள் காம்புப்பூ

பரிந் துவந்து பிறப்பித்து தரக் கூடுகிறது
தீண்டலற்று நிறையும் கருவறைகள்
பரிதியின் ரேகைகளுடன்

மிருதுவான கனிமம் ஒளி உணர
அகழ்ந்த கரம் சுவடுகளற்ற வெளியிலிருந்து....
சிமிட்டி ஜீவன் வளர்க்கும் சிப்பியின் இமைகளால்
ஆன உதடுகளுக்குரிய செவிமடலில்
வலம்புரி ஓடுகள்

சொட்டும் நீர் உறைந்து நுரைக்கல்லான
குகைக் கூரைகளில் பாசி படர்த்துகிறது
கோளத்தின் பருவம்

எரிந்த வனத்தின் கார்பன் எலும்புகளில்
இருந்து பெயர்ந்து பின்னத் துவங்குகிறது
தொங்கும் கூடுடைய பறவை

Tuesday, December 15, 2009

உதிரன் மற்றும் ன்ரதிஉ

தகனச் சாம்பலில் இருந்து 180 டெசிபலில் அகவிப் பறந்தது பீனிக்ஸ். யாளிகள் உலவும் எரிமலை படுகைகளில் முற்பிறவியாகி இருதலை சர்ப்பத்துடன் சல்லாபித்தேன். தோலுரித்துவிட்டுபதினாறு யாளிகள் பின்புறம் பூட்டிய ஒரியன் நெபுலாத் தேரில் சாலமன் மீன் வழிகாட்ட சமோவா ரொங்கோ தீவுகளிடை கடக்கும் தேதி கோட்டை அடைந்தேன், ஒரு நாளின் தலை சமோவாவிலும் கால் ரொங்கோவிலும்.. அடுத்த பிறவி மெரிடியன் சிரித்தான்.

நவபாஷாணத்தில் சிலை செய்து கொண்டிருந்தான் சைனா துறவி. மஞ்சளாற்றில் நீர் குடித்த யாளிகளில் இரண்டு வழிதவறி பின்னாளில் டிராகன்கள் என அறியப்பெற்றன. கார்பன் டெஸ்டில் தேர்ந்த அராமிக் பேசிய ஆட்டிடையனின் எலும்புகள் மஜ்ஜை மரிக்காமல் விற்ற பூனையின் பேரத்தில் குளொனிங்குக்கு உதவுமென வாங்கிக் கொண்டேன் பிறிதோர் பிறவிக்கு.


கடைசி நியாண்டர்தாலின் மரணச்சடங்கில் மண்டையோட்டை திருடக் காத்திருந்தாள் ஏவாளின் பேத்தி. சபிக்கப்பட்ட கிரேக்க தேவதையுடன் சோம பாணம் அருந்திவிட்டு பாலைவனத்து ஜின்களுடன் பாரசீகத்தில் நடனம்.

மொகஞ்சதாரோவின் மீதங்களும் அரிக்கமேட்டின் எச்சங்களும் நிரம்பிய தாழி சூழ் கூடத்தில் உயிரெச்சங்கள் தன் நுண்ணோக்கியின் கீழ் படர்த்தி ஆயும் நுட்பன் பெயர் உதிரன் .மின்னிலக்க பிறழ்வில் திசுக்களின் தீபகர்ப்ப கூட்டில் வளரத்துவங்கிய நுண்ணுயிர் ஹோமோ ஸேபியன்சஸுக்கு ஒரு கையில் துவாரம் மற்றபடி உதிரனின் பிரதி .

அன்றைய கனவில் அவன் இருதலை நாகத்தை......

Tuesday, December 8, 2009

சில்க் ஸ்மிதா என்ற விஜய லட்சுமிக்கு

(December 2, 1960 – September 23, 1996)

குளிர்பதனகத்தின் சுவர்களில் தார்பூசிய தெர்மகோல் கனிகளை காய் அளவு கனிந்த தோட்டா பழிக்கும் . பறவையின் எச்சமாய் விதை நெளியும் துளிகளில் முலைகளுக்கு பிரதியாய் கண்கள் .விலா எலும்பு முளைத்த பாம்புகள் தின்ன வியலாத கனி மீதான பசலையில் சுரக்கும் விஷம் . லாடமற்ற குளம்புகளின் பயணம் ஒளி ஆண்டுகள் பயணிக்கும் நட்சத்திரங்களுடையவை . கடவுளர் மாறும் ஆகாயத்தில் தேவதைகள் இளமை மாறாமல் மரிக்க சபிக்கப் பெற்றிருக்கிறார்கள் .

காதலின் நிணம் வழியும் ரப்பர் நுனிகளில் குறிஞ்சிப்பூ விதைக்கு ஈரம் இல்லை .ரகசியங்கள் அற்ற நிர்வாணம் உருவாக்கும் ரகசியங்கள் நெருப்பினைப்போல் ஒளியுடன் திரிகுவதில்லை உப்பு ஜாடியில் உறைந்திருக்கும் கடல் . திரைகளை மாற்றிக் கொண்டே இருந்தது வெயில் பாரிஜாதப் பூவின் வர்ணங்களால் .சிலுவையை போல் விரிந்த கரங்கள் வாய்த்த இசைக்கருவி முன்னொரு நாள் ஒரு பறவையின் சிறகாய் இருந்தது . இரவின் சாயல்களுடனே விடியும் பகல்கள் உடைய கிரகத்தின் மது கோப்பைகளில் நிரப்பப் பெறுவதில்லை .மல்லிகையின் காம்பை பவழமல்லியினுடயதாய் மாற்றும் சொற்கள் தேடிக் களைத்த தூரிகை தன்னை ஒரு கண்ணாடியாக்கி கொண்டது . தனது அத்தனை முட்களையும் நிறத்தகடாய் இறகு செய்யத்தெரிந்த உயிரிக்கு நரை இல்லை

(குரல் கொடுத்த ஹேமா மாலினிக்கும்)

Saturday, December 5, 2009

பின்ன உடலின் ஸ்கலிதங்கள்

நிலவில் ஹைட்ரசில் திரளும் கிரகண
மகாயாண இறுதியில்
திரிந்த விந்து மிடோசிஸ் பின்னி வளர்ந்து
பெஞ்சமினின் அளவுகோலுக்குள்
பொருந்தக் கண்டது உடல்

பியானோ கடல் மீட்டும்
இலக்கம் வளரும் மழை கருவிரல்
எலெக்ட்ரா காம்ப்ளெக்ஸ்
பாறைகளின் கிராபைட் நுனி ஒளிர
புலால் உண்ணும் தாவரம்
வசியம் முகிழ்த்து

உதிரத்துரு வாசம் வீசும் டிராகன் நாக்கு
வெப்புடனுப்புமிழ் காய சண்டிகை

குறுக்கு வெட்டாத கோளங்கள்
மடங்குகளாக தலை கீழ் விகிதங்கள்

குவாண்டம்
பெல்லிடம் தோற்ற
காந்தம் திருப்பிய அணுத்துகள்
தானறிகிறது திசை

யுரேனிய விரைப்பைகள் நீலம் பாரிக்க சுமக்கும்
கோமாளி மீனுக்கு பெண்ணுறுப்பு வால்புறம்

பின்ன உடலின் ஸ்கலிதங்கள்
துடிப்பிசை மாறும் கரு மற்றும்
அதைத்தாங்கும் உடல்

(உரையாடல்: சமூக மற்றும் இலக்கிய அமைப்பு நடத்தும் கவிதைப் போட்டிக்காக )

Thursday, December 3, 2009

பா.ரா. வின் கருவேலநிழல் - புத்தகம் -ஒரு பார்வை


தன்னை வாசிக்க முடிகிற படைப்புள் கரையும் மனமுள்ள அனைவருக்கும் வாழ்வின் இறுகிய கரங்களில் இருந்து கனவுகளை மீட்டெடுக்கும் அத்தனை எத்தனங்களுக்கும் இந்த இணைய வெளி ஒரு பயிலரங்கு, சோதனைக் கூடம் தவறவிட்ட கணங்களை பதிவு செய்து மொழியாக்கும் கலை கவிதையாக பயின்ற வெகு சிலருள் பிரதானமானவர் பா.ரா என அறிந்தவர்களால் செல்லம் கொண்டாடப்படும் பா.ராஜாராம்

இந்த வலை உலகில் .மக்கா என்ற சொல் அவ்வ்வ்வ் என்ற திரைப்பட நகைச்சுவை நடிகனின் சொல்லுக்கு இணையாக பின்னூட்டங்களில் பயனுறுவது பா.ரா வின் வருகைக்கு பிறகு என்பது என் துணிபு

கலைக்கு முற்றிலும் தன்னை தர முயலும் உணர்வு சார் மனநிலை மெல்ல மாண்டு வரும் வாழ்வியல் முறையில் பத்திரிகை கனவை நிகழ்த்தி பார்ப்பது தனை பிணையாக வைத்து வாழ்வோடு ஆடும் ஆட்டம்

அகநாழிகை வாசு பத்திரிகை துவங்கியதோடு அல்லாமல் இந்த வலை உலகின் படைப்பாளிகளை அடையாள படுத்தி வருகிறார் . தான் மிக மதிக்கும் எழுத்தாளருடன் சமகால படைப்பாளிகளின் வரிசையில் தனது படைப்பும் இடம் பெறுகையில் எய்தும் புளகம் இன்று வலையுலகில் வாய்த்திருப்பது வாசுவின் கனவால் .

உதிரம் உஷ்ணம் குறைவதற்குள் தன் படைப்பை புத்தகமாக பார்க்கும் கனவு சாத்தியம் ஆகி இருக்கிறது இன்றும் நம் சக வலைஞர்களுக்கு அதற்கு வாசுவுக்கு நன்றி .படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள் !

ஒரு மணியொளி கசியும் மாலையில் புத்தகமாக்கும் தனது கவிதைகளுக்கு வார்த்தைகளை எழுதித் தர பா.ரா அழைத்து கேட்ட பொழுது மிகுந்த கூச்சமும் தயக்கம் நிரம்பிய மனநிலையும் ஒரு சேர வாய்த்தது .நேயம் அன்றி வேறு என்ன இருக்க முடியும் எனது சொற்களுக்கும் தனது கவிதைகளுக்கு இடையே இடம் தர .பின்னட்டை வாசகமும் கவிதைகளுக்கு கட்டியம்கூறும் வாசகங்களும் ஆன சொற்கள் உங்களுடன்.

****************************************************************************
பிரியம் தழைத்த சொற்களால் ...


நிழல்கள் குறுகி திசை மாறி விரியத் துவங்குகின்றன . பறவைகளற்ற ஆகாயத்தில் தரையிறங்கும் தாழ்வுடன் அசையாத சிறகுகளில் ஒளி சிமிட்டி கடக்கிறது விமானம்.பெருக்கித் தீர்த்த சிமெண்ட் தரையில் இன்றைய நாளின் முதல் இலையை உதிர்த்துப் போகிறது காற்று.வாசிக்க கிடைத்த கருவேல நிழலின் வரியொன்று சொற்கள் மறந்த பழைய பாடலின் துவக்க இசையைப் போல் சுழித்து நினைவை உருவத் துவங்குகிறது

திசுக்களில் இருந்து மாதிரிகளை தயாரித்துக் கொண்டிருக்கும் மின்னிலக்க உலகில் கவிதையை தன் வெளிப்பாட்டு வழியாய் கைக்கொள்ளுகையில் நேரும் சகல சவால்களையும் உள்வாங்க நேர்ந்திருக்கிறது இந்தத் தொகுப்பும்

அயல் வாழ்வில் தனியனாய் உணரும் ஒரு எளிய மனதின் கோட்டு சித்திரங்கள் என்று சுலபமாக வரையறுத்து விட முடியாத அகச் சிக்கல்களை பேசுவதாய் இருக்கிறது இந்த கவிதைகளின் வரிகள்

களிப்பெய்தி கூத்தாடும் தருணங்களில், வலிமிசை வதையுறும், மொழி வழி நிரவித்தீராத உணர்வு நீட்சிகளில் சார் புலம் பயிற்றுவித்த அறி புலன் இசைந்த ஊடகத்தை தேர்கிறது கலையென விதைத் தோல் உரிக்கும் தெறிப்புகள்.

புற வாழ்வின் நெருக்கடிகளில் இருந்து தன்னை தப்புவித்துக் கொள்ள பால்யத்தின் அணுக்கமான ஒரு புன்னகை குறித்த நினைவுகூறல் போதுமானதாய் இருக்கிறது .அகத்தளத்தில் நிகழும் சிலிர்ப்புகள் ,சலனங்கள், மயக்கங்கள் மற்றும் துயரம் பெருக்கும் கண்ணீர்த் துளிகள்.

பிரிவு ஒரு உயிரியாக உலவுகிறது இந்த வரிகளை எழுதிய பேனாவின் நிழலில் எறும்பாக. துரத்திக் கொண்டிருக்கும் வாழ்வில் தனதன்பை வழங்கித் தேற்ற வியலாத தூரங்களிலிருந்து கேட்க நேரும் துயரங்கள், துர் நிகழ்வுகள் இந்தக் கவிதைகளின் உள்வெளியில் காணக் கிடைக்கின்றன

சாய்ந்திருந்த தோள்கள் தாழத்துவங்கும் முதுமை இறைஞ்சும் அண்மையை பிரியம் தழைத்த சொற்களால் ஒரு கெவுளி வெற்றிலையை வழங்க வாய்க்காத வேதனையை பதிவு செய்கின்ற வேளையில் நாளை மீதான பாதுகாப்பின்மை ஒரு தகப்பனாக பதிவு செய்ய வைத்திருக்கும் கவிதைகள் அணுக்கத்தை கூட்டவல்லவை

சராசரி நிகழ்வுகளை நேரிடையான மொழியில் பேசும் இக்கவிதைகளில் நெய்திருக்கும் ரொமாண்டிசம், மொனோலாஜிக் எழுத்துகளின் வாசகனை பெரிதும் ஈர்க்கக் கூடும் ஆனால் நவீன கவிதை மொழியின் மாற்றங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியமான ஒரு மாறுதலை இந்தக் கவிதைகளில் நிகழ்த்தக் கூடும்.

சார்ந்திருந்த சமூகத்தின் அவலங்கள் ,உறவுகளுக்கிடையே நிலவும் சிடுக்குகள், உடல் சார்ந்த தவிப்புகள் மற்றும் மிக நுண்ணிய அவசங்களை வழங்கு மொழியில் பேசும் இக்கவிதைகள் இருண்மை கூடிய படிமங்கள் பசையற்ற குறியீடுகள் வசக்கித் திணிக்கும் வார்த்தை ஜாலங்கள் அற்று இருப்பது ஆறுதல்

மிக எளிமைப் படுத்தப் பட்ட சொல்முறையால் கவித்துவத்தை இழந்து நிற்கும் வரிகள் சில எளிய திருத்தங்களைக் கோருவதாக அமைந்திருக்கின்றன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது

பாசாங்குகளற்று விரியும் தனி மனித வாழ்வின் சமிக்ஞை குரலில் சக உயிரின் மீதான நேயத்தை காதலை காமத்தை இயற்கை மீதான லயிப்பை மொழிப் படுத்தியிருக்கும் இந்த வரிகள் ஒரு நீண்ட காத்திருப்புக்கு பிறகான ஆசுவாசத்தை தருகின்றன

வட்டார மொழியின் வசீகரம் கூடி நிற்கும் வரிகள் தரும் நெருக்க உணர்வு விரயப் பட்ட சொற்களின் மீதான வருத்ததையும் பதிவு செய்யத் தூண்டுகிறது

அந்தரங்கமான நிகழ்வுகளை பதிவு செய்திருக்கும் கவிதைகளில் துணையுடன் உரையாடும் மென்னகையூட்டும் சொற்களில் கருணையை ஆராதிக்கும் மிகையுணர்வு கவிதைகளில் வாசகனின் தர்க்க மனது இளைப்பாறத் துவங்குகிறது

வரும் நாட்களின் மீதான நம்பிக்கை, தீர்ந்த வருடங்கள் குறித்த நினைவுகளின் அலைவு, நுரைகளற்ற கோப்பையின் மோனம் ,மரித்த உயிருக்கான கடமை ,இயல்பான பலகீனங்களின் மீதான சுய எள்ளல்,உக்கிரமான வாழ்வின் அழகியலை மட்டும் பேசாமல் அதன் வன்முறை மற்றும் குரூரங்களையும் பதிவு செய்திருக்கும் ஆசிரியருக்கு இது முதல் தொகுப்பு


கவிதையின் குவிமையம் ரசமானியின் காற்றுக்குமிழாய் பெயர்ந்தபடி இருக்கும் இந்தக் கவிதைகள் தம் வழியை தாமே அடைய எத்தனிக்கின்றன.அடையவும் கூடும்.

வாழ்த்துகளுடன்

நேசமித்ரன்

Monday, November 30, 2009

யாருமற்ற கருவறை


ஆரஞ்சு சுளையின்
சொட்டு வடிவ தசைகள்
தின்னக் கொடுத்தபடி
மிதக்கும் கனவின் பிரேதம்
அட்டையின் உதடுகள் வாய்த்த
இருள் உறிஞ்சிய உடலுடன் .

இமை ரோமங்களால் தைக்கப் பெற்றிருக்கும்
கண்களுடைய பெண்
பாறைகளில் உலர்த்திக் கொண்டிருந்தாள்
தன் கழற்றிய சருமத்தை

மேகங்கள் திணிந்த முட்டைகள்
மொட்டுகளுக்குள் இருக்கும்
காற்றால் சுவாசிக்கின்றன

தக்கை துளைத்து நகரும்
வைன் திறப்பானின் சுருள் கரம்
மூளையின் உறைந்த உதிரம்
நடுவில் கிடக்கும் நரம்பு

யாருமற்ற கருவறையில்
தலைப்பிரட்டைகள்

அம்புகள் குறித்த பயம்
பறவையின் உடலை
எய்தத்தயாரான வில்லாக
ஆகாயத்தில் மிதக்க வைக்கிறது

Thursday, November 26, 2009

காத்திருப்பின் நெடு வழி தீர்ந்து

திசைகளை கலைடாஸ்கோப்பில் போட்டு குலுக்கியது மாதிரி இமைமை கரைத்துக் கொண்டு பெய்கிறது பருவத்தின் முதல் மழை, புகை மண்டலம் வர்ணமூட்டிய கருமையுடன்…மின்மடலில் அழைப்பிதழ் ஒன்று விரிகிறது அறிந்த முகவரியில்   இருந்து...

 ஒரு நடிகை பழங்காதலி உடனான முயக்கத்தை   நினைவுறுத்துவதாக அல்ல இமை மட்டும் சிமிட்டும் கண்களுடைய இசைக்கலைஞன் எழுதிய இசைக்குறிப்புகளாக அவன் கவிதைகள். கவிதையில் மெய்மையும் கற்பனையும் காதலில் காமமும் அன்பும். மெய் மிக எழுதும் கவிஞன் கனவுகளின் மென் துயரும் பிரிவின் வன் தகிப்பும் வாசல் தெளிக்கும் கால்களின் லயம் உணர்ந்த மொழியாளன்.


வதையுறும் ஞாபகத் திறப்புகள் மொழி வழி கவிதையாகும் தருணங்களில்
எய்தும் பித்து நிலை தொற்றிக் கொள்ள வைக்கும் வரிகளில் ஓர்மை மிக செய்யும் கலைஞன்.தன் காத்திருப்பின் நெடு வழி தீர்ந்து பிரிய உலகை புதுப்பிக்க இன்னோர் உயிரை தனை ஆளத் தேர்ந்து நிற்கிறான். பவானி  என்னும் பெயர்கொண்ட அந்த இனிய  சகோதரியுடனான   நாட்களில் துவங்குகிறது  மெய்யான பயணம்


  இந்த  சொற்களை அட்சதைகளாய் தூவும் தூரங்களில் வாழத் தேர்ந்திருக்கும்   இவ் வாழ்வில்  தேவதைகள் சூடியிருக்கும் மலர் மகுடமாய்  கோப்பைகளின்   நுரை மகுடங்களில் உடையும் குமிழ்களில் இந்த சொற்களை கொண்டு சேர்ப்பவர்களுக்கு  என் முத்தங்கள் நண்பர்களே  
( இது வரை முகம் பார்த்திராத நண்பன் யாத்ராவுக்கு ...)

Tuesday, November 24, 2009

சொற்கள் பறவைகளாகும் வனாந்திரத்தில்

நட்சத்திரம் பறக்க நிலாக்கடலை
புடைத்துக் கொண்டிருக்கிறது இரவு


நிறமூட்டிய சருமம்  துகில் ஆன
சிலிகான்   பெண்
கடற்பஞ்சு கவசம் எரிக்கிறாள்

பற்கள் அற்ற எறும்புத்தின்னியின் நாக்கு
ஆளுயர நீள்கிறது
சொற்கள் பறவைகளாகும் வனாந்திரத்தில்

பூச்சுகளற்ற வரைபடமாய்
 தேகம் திறந்த விரல்களில்
 ஒரு பறவையின் அலகு

பிழை அறிவிக்கும்
 அதிகாலை ஜன்னல் வெயில்
 ஒளிப்படம் விரிக்கும் தூசு மழை

 ரவிக்கை ஹூக்கின்  விடுபடும் முனையில்
பாம்பின் பல்

ஒட்டகச் சிவிங்கி நீர் குடித்தாக
வேண்டியிருக்கிறது நீர் வற்றிய
புனலில்

Saturday, November 21, 2009

................................

இனி திறந்துப் பார்க்க உனக்குத் தர கல்லறை மட்டுமே உண்டு -எமிலி டிக்கின்சன்


பிசாசுகள் பிசாசுகள் என்றே அறியப் பெறுகின்றன.
கொடு வதைகளின் முடிவில்
தம் பெயர்களை தெரிவிக்கின்றன

பிசாசுகள் பருவம்
 தீர்ந்தவர்களை தீண்டுவதில்லை.

பிசாசுகள் புகுந்திருக்கும் உடலில்
 அறிந்திராத நளினங்களை மொழிகளை
 புகுத்திக் காட்டுகின்றன.

உடலற்ற வாழ்வில்
புதைத்த பிறகும் வளரும்
 நகமாய் கூந்தலாய்
உடலின் இச்சைகள்
பருக ஆளற்று சுரந்து வலிதரும்
 பாகங்களுடன் அலைவுறுகின்றன.

பொதுப் பால் பிசாசுகள் உடல் அற்று
உணர்வுடன் திரிவதன்
இலகுத்தன்மையுடன் திரிகின்றன.

பிசாசுகள் திரவங்களின் படுகைகள்
 வற்றிய பூமியின் தட்டு
 நகரும் தருணங்களை தேர்கின்றன.

பிசாசுகளை வெறுக்க வியலாத
மென்மனங்கள் அவற்றின்
மீது பரிதாபம் கொள்கின்றன.

தம்முள் மீதமிருக்கும் கனவின்
சாம்பல் குடுவைகளில்
வசிக்க இடம் தருகின்றன.

பிசாசுகள் கடவுளர் போன்றே
மனித உடலின் அதீதங்களுடன்
 வரையப் பெறுகின்றன.

பிசாசுகள் குழந்தைகளை வன்புணரும்
பாசாங்குகளுடன் நுழைகின்றன.

கிளர்த்தப் பெற்று தீர்க்க வியலாத
உடலுடைய பெண்களை
 விரும்பிய உடலை சேர கூடாத
 ஆண்களை தேடித் திரிகின்றன.

பிசாசுகள் குறித்த கதைகள்
குழந்தைகளின் இரவுகளை நிரப்புகின்றன.

பிசாசுகள் பிசாசுகள்
என்றே அறியப் பெறுகின்றன.

(இலைகளின் ரேகைகள் வாசித்து மரத்தின் ஆயுள் கணிக்க முயன்று   தோற்கும்  காற்று அலைகளை
எண்ணத் துவங்குகிறது ) 

Friday, November 20, 2009

கல்யாணி பியரும் தபுதாரமும்

இசை புலர்த்திக் கொண்டிருக்கிறது தனிமையின் இருளை .மின்னி நினைவூட்டிக் கொண்டிருக்கிறது கைபேசி வாழ்த்த வேண்டிய நண்பனின் பிறந்த தினம் குறித்து .
முன்னம் நெகிழ்ந்த ஆடைகளுடன்  மணற்துகள்கள்   நெரிய நதியாடி தென்னம் கீற்றுகள் போர்த்திய நெத்திலிக் கருவாடு மணக்க கழுத்து வரை புதைந்து கிடக்கும்
கல்யாணி பியர் துணை இருக்க கெட்ட வார்த்தைகளால் வாழ்த்திய  நாள் நினைவுக்கு வருகிறது .ராணி  திலக்கின் 'தபுதாரமும் என் தாபதச் செடியும்' என்ற வரிகள் தன் வாழ்வாய் அமைந்து போனவன் அவன் .


கைபேசிகள் வந்திராத நாட்களில் எழுதிய நீண்ட கடிதங்கள் .என்னடா ஒருத்தனை கொன்னா கொலை நூறு பேரக் கொன்னா யுத்தம் இதுக்கு தண்டனை  அதுக்கு பதக்கம் என்று கேட்ட போதும்  .உங்க சாமியோட  எல்லா அவதாரமும் இந்தியாவுலதான் நடக்குமாடா என்று நான் கேட்ட  கேள்விக்கும் , பாட்டு கேட்டு   வளரும்டா  செடி அதுக்கும்  உசிர் இருக்கு கைப்பிடி சோத்துல எத்தன உசுரு   அது தப்பில்ல உன்னைப் போல ரத்தம் வர்ற  கோழிய வெட்டறது மட்டும் தப்பா ?    உசிர் ஒன்னுதான ... ரகசியங்களற்ற புன்னகைதான் பதில்  எல்லாவற்றுக்கும்.   படிக்கறதோட எழுது மாப்ள நல்லாத்தான் யோசிக்குற என்று ஊக்கம் ஊட்டியதும் நட்புதான் 

மாப்ள அம்மாவைக் கொஞ்சம் பார்த்துக்கடா என்ற போது இந்தக் கையில நானுந்தாண்டா  சோறு வாங்கித்தின்னுருக்கேன் கிளம்புவியா .வந்துட்டாரு கோம்பை துரை

 வாழ்வு அதன் போக்கில் இழுத்துச் செல்கிறது  தசை மீதமிருக்கும்  பூச்சியின்  சிறகைப்  போல .புலம் பெயர்தலும் நம்பிக்கைகள் பிறழ்ந்து மங்கத்துவங்குவதும்...   விரைப்பைகளை  பறித்துக் கொண்டு முதலிரவு அறைக்கு அனுப்பி வைக்கிறது .தூர்ந்த கிணறுகள்  சாயம் போன  தாவணியாய் காய்ந்த  நதி மணல்  'தலைப்பாக்கட்டு இறங்கி  இடுப்புக்கு வந்திருச்சு மாப்ள அதான் பொழப்பு தலைப்ப பார்க்கலாம்னு  கிளம்பிட்டேன் ' போட்டிகளுக்கு  மாட்டு வண்டிகளை அவன்  தயார் செய்யும் விதமே பேரழகுதான் . கடன்காரர்களின்  வார்த்தைகள் கத்திகள் தேவைப்படும் பிரசவத்திற்கு முன் முதுகுதண்டில் போடப்படும் ஊசிக்கு சமம்

இந்த வாழ்த்தை அவன் எதிர்கொள்ளும் விதம் அந்த நாட்களின் வர்ணங்கள் முற்றும் உதிர்ந்த குரலில் தான் இருக்கும்.சிறு பொன்மணியும் அள்ளித்தந்த வானம் அன்னையல்லவாவும் ஒலிக்க விடுகிறேன் உன் பிடித்தங்கள்...   புதுப்பிக்கப்பட்டு கொண்டே இருப்பது தானே வாழ்வு இந்த சொற்கள்  அதை செய்யட்டும்.